ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘டிஎன்ஏ’. இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

படத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அதர்வா, “படத்தை பார்த்த அனைவரும் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள், இது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்திற்கு காரணமான இயக்குநர், நாயகி மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த படத்தை சமீபத்தில் திருமணம் ஆனவர்களுக்கும், குழந்தை பெற்ற பெற்றோருக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறோம். ஏனெனில் இப்படத்தின் கதை அவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.
நாயகியாக நடித்த நிமிஷா சஜயன் தனது உரையில், “படத்தில் நான் நடித்த அம்மாவின் பாசம் குறித்த சீன்கள் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் கதை, கதாபாத்திரம் மற்றும் உணர்வுகள் அனைவரையும் தொடும் வகையில் அமைந்துள்ளன. படம் பார்த்தவர்கள் எனக்கு விருது கிடைக்கும் என கூறுகிறார்கள். இது எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது. விருது கிடைக்க வேண்டும் என்பதோடு, தமிழில் தொடர்ந்து மேலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.