இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘ரங்கூன்’ படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஹீரோயினாக நடித்தவர் சனா மக்புல். அதன் பின்னர் ‘காதல் கண்டிஷன் அப்ளை’ என்ற திரைப்படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் இதுவரை வெளியிடப்படவில்லை. தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சனா மக்புல், கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பகிர்ந்ததோடு, அவர் கூறியிருப்பதாவது: “நீண்ட நாட்களாக கல்லீரல் அழற்சி நோயால் தவித்து வருகிறேன். எனக்கு ‘லிவர் சிரோசிஸ்’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த நோய் குணமாகுமா என நான் எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது என் உடல்நிலை மோசமாகியுள்ளதால், மனதளவில் தைரியமாக இருக்க நான் அதிகமாக முயற்சி செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அவருக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என மருத்துவமனை சார்பான தகவல்கள் கூறுகின்றன.