அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’ ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பிறகு சசிகுமார் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தில், சிம்ரன் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மே 1 ஆம் தேதி வெளியான இந்தப் படம், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையிலிருந்து, பொருளாதார காரணங்களால் சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் நுழையும் சசிகுமார் குடும்பத்தின் வாழ்க்கை அனுபவங்களை, நகைச்சுவையுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் படம் விவரிக்கிறது.
இந்த நிலையில், நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: “’படம் சூப்பர்’ என்று யாரும் சொன்னாலும் மனது மகிழ்ந்து விடுகிறது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னால் அந்த மகிழ்ச்சி சொல்ல முடியாதது. ‘அயோத்தி’, ‘நந்தன்’ படங்களைப் பாராட்டிய அவர், இப்போது ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை பார்த்து, ‘சூப்பப்பர் சசிகுமார்…’ என்று உருக்கமாகச் சொன்னார்.
‘தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க… சொல்ல வார்த்தையே இல்ல. அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல காட்சிகளில் என் மனதையே கலங்கடிச்சீங்க. சமீப காலமாக உங்கள் கதைத்தேர்வு ஆச்சரியப்பட வைக்கிறது சசிகுமார்…’ என்று அவர் கூறிய போது, நான் பெற்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் மனதில் பதித்துள்ளார். படக்குழுவின் பங்களிப்பையும் மனமுவந்து பாராட்டினார். ரஜினி சாரின் ஒவ்வொரு வார்த்தையும் ‘டூரிஸ்ட் பேமிலி’ குழுவுக்குக் கிடைத்த பொக்கிஷமாகக் கருதுகிறேன். அவருடைய உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும், தங்கமான மனதுக்கும் என் மனமார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.