தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, நானி ‘ஹிட் 3’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ‘ஹிட் 3’ படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், வரும் மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். ரத்தம் சிந்தும் கிரிமினல் கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த ‘ஹிட் 3’ திரைப்படத்தில், நானி ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், பிரதீப் ரங்கநாதனை பற்றி நானி கருத்து தெரிவித்தார். அதில் அவர், “கோமாளி திரைப்படம் வெளியான பிறகு, என்னை வைத்து படம் இயக்குவதற்காக பிரதீப் ரங்கநாதன் என்னிடம் ஒரு கதை கூறினார். நான் அவரை தொடக்க காலத்திலேயே சந்தித்து இருந்திருந்தால், அவருடைய படத்தை கண்டிப்பாக தயாரித்திருப்பேன். ஆனால் இப்போது அவர் மக்கள் மத்தியில் பிரபலமான கதாநாயகனாக மாறிவிட்டார். புதிய முகம், புதிய ஆற்றல் ஆகியவற்றுடன் புதிய தலைமுறை சினிமாவை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறினார்.