மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராக பெயர் பெற்றவர் ஷைன் டாம் சாக்கோ. நடிப்பிற்காக மட்டுமின்றி, அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தும் பேட்டிகளினாலும் பிரபலமானவர். தமிழில் ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்த ‘தசரா’ திரைப்படத்தில் பிரதான வில்லனாக நடித்தவர் இவர்தான். அதே சமயம் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை முக்கியத்துவமில்லாமல் மாற்றிவிட்டதாகவும், படத்தைப் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில், தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் அவர், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தமிழில் வெளியான ‘குட் பேட் அக்லி’, மலையாளத்தில் வெளியான ‘பஷூக்கா’ மற்றும் ‘ஆலப்புழா ஜிம்கானா’ என மூன்று திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’யில் இடைவேளைக்குப் பிறகு வந்து, அஜித்தின் வீரதீரத்தை புகழ்ந்து பேசும் ஒரு சில நிமிட காட்சிகளில் மட்டும் தோன்றி தனது வேடத்தை முடித்தார் ஷைன் டாம் சாக்கோ.
அதேபோல் மம்முட்டியின் ‘பஷூக்கா’ படத்திலும் வில்லன் குழுவில் ஒருவராக வந்திருந்த அவர், நின்று விளையாடுவார் என்று எதிர்பார்த்தபோது, ஒரு சிங்கிள் ரன் எடுத்துக் கொண்டு கிளம்பிச் செல்லும் பேட்ஸ்மேன் போல் ஒரே காட்சியில் திரையிலிருந்து மறைந்தார். இதேபோல் ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில், ஹீரோ மற்றும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முக்கியமான கோச் கதாபாத்திரத்தில் ஒருவர் முழுப்படத்தையும் ஒட்டியிருந்த நிலையில், ஷைன் டாம் சாக்கோ மல்யுத்த களத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் ரெப்ரீயாக தோன்றினார். இவ்வாறு ஒரு சிறந்த நடிப்பு திறமையுள்ள நடிகரை வெறும் ஒரு காட்சிக்காக மட்டுமே பயன்படுத்தி வீணாக்கக்கூடாது என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்களது வேதனையை வெளியிட்டு வருகின்றனர்.