மலையாள திரைப்பட உலகம் அளவில் சிறியதானது என்பதால், அங்கு ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலிப்பது என்பது சில வருடங்களுக்கு முன்னர் வரை மிகப்பெரிய கனவாகவே கருதப்பட்டது. ஆனால், அந்த கனவை 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘புலி முருகன்’ திரைப்படம் நனவாக்கியது. அதன் பிறகு, ‘லூசிபர்’, ‘2018’, ‘ஆவேஷம்’, ‘ஏஆர்எம்’, ‘மார்கோ’, ‘பிரேமலு’, ‘த கோட் லைப்’ போன்ற பல திரைப்படங்கள் 100 கோடி வசூலை எட்டியுள்ளன.
மலையாள சினிமாவின் வரலாற்றில் முதல் முறையாக 200 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படமாக கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ உருவானது. 240 கோடி ரூபாய் வசூலித்த அந்தப் படம் இந்த சாதனையை ஒரு வருடம் மட்டுமே தக்க வைத்திருக்க முடிந்துள்ளது.
மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘எல் 2 எம்புரான்’ திரைப்படம் தற்போது 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி, முன்னதாக இருந்த சாதனையை முறியடித்துள்ளது. இந்தப் படம் எப்படியாவது மேலும் 50 கோடி வசூலித்து, 300 கோடி ரூபாயைத் தாண்டும் முதலாவது மலையாள திரைப்படமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது மலையாள ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.