சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் பழைய படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் நடைமுறை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கில்லி, 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, பாபா, பில்லா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி, திரையரங்குகளில் மீண்டும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன மற்றும் குறிப்பிடத்தக்க வசூலையும் ஈட்டின.

இந்த நிலையில், வரும் மார்ச் 14ஆம் தேதி, இரண்டு திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. 2004ஆம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்த ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ திரைப்படமும், 2016ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படமும் ஒரே நாளில் திரையரங்குகளில் திரும்ப வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி, இருவரும் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.