நடிகர் ஆதி, 3 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து வழக்கு தொடரப்படும் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதை ஆதி மறுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ஆதி தனது நடிப்பில் வெளிவந்துள்ள ‘சப்தம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதில், அவர் நிக்கி கல்ராணி குறித்து கூறியதாவது: “‘சப்தம்’ படத்தில் லட்சுமி மேனனும் நானும் நெருக்கமாக நடித்திருந்தாலும், அது மனதளவில் மட்டுமே; உடல் ரீதியாக அல்ல. ஏனென்றால், இப்படத்திற்கு அப்படி ஒரு காட்சி தேவைப்படவில்லை. இந்த படம் காதல் படம் அல்ல, ஆனால் காதலும் இதில் இடம்பெற்றுள்ளது.”**
“திருமணமாகிவிட்டதால், மனைவியுடன் இணைந்து தான் கதைகளை கேட்பேன் என்பதெல்லாம் இல்லை. ஆனால், ஒரு கதை கேட்ட பிறகு, நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வது போலவே அவரிடமும் சொல்லி, அதைப் பற்றி கலந்துரையாடுவேன். எனக்கும் அவருக்கும் எத்தகைய கதைகள் பிடிக்கும் என்று தெரிந்திருக்கிறது. எனவே, என் பார்வையில் இருந்து யோசிப்பார். ஆனாலும், இறுதி முடிவை நான் தான் எடுக்கிறேன்.”
“நான் கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்க வேண்டியிருந்தால், முன்கூட்டியே மனைவி நிக்கி கல்ராணியிடம் அதைப் பற்றி கூறிவிடுவேன். அவரும் சினிமா துறையில் இருப்பதால், கதைக்கு அவ்வாறு நடிக்க தேவையா இல்லையா என்பதை புரிந்துகொள்வார். கதைக்கு அவசியமில்லையெனில், அவர் நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறோம். அதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.” என்று கூறினார்.