2023 ஜனவரி 11 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, நேற்று தான் நடிகர் அஜித்தின் புதிய திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. பல தடைகளை கடந்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு திருவிழா போல கொண்டாட்டமாக இருந்தது. ரசிகர்களைப் போல் திரைப்பிரபலங்களும் திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் திரண்டனர்.
இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் விடாமுயற்சி திரைப்படத்தைப் பார்த்து, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாராட்டினார். அவர் கூறியதாவது, விடாமுயற்சி ஒரு விறுவிறுப்பான த்ரில்லர்! ஒரு புதிரைப் போல, முதல் காட்சியில் இருந்து கடைசி வரை அனைவரையும் ஈர்க்கும் படைப்பு! அஜித் சார் தனது திரை நடிப்பால், மென்மையான நடைமுறையால் படத்தை முழுவதும் தன்னுடைய தோள்களில் சுமந்து செல்கிறார். ஆபத்தான ஆக்ஷன் காட்சிகளிலிருந்து, உணர்ச்சி மிகுந்த இறுதி தருணம் வரை, அவர் மிக நேர்த்தியாக, உண்மையாக தனது கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
அனிருத் இசையமைப்பின் அதிரடியை வைத்துப் பேசவே முடியாது! படம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் வாத்தியங்கள் ஒலிக்க, ரசிகர்கள் விசில் அடிக்கத் தவற மாட்டார்கள்! மகிழ்திருமேனி சார் கதையை மிகத் தீவிரமாக உருவாக்கியுள்ளார். கடினமான சூழலில் கூட ஒவ்வொரு காட்சியும் நிலைத்தன்மை பெறும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர்கள் ஓம்பிரகாஷ், நீரவ் ஆகியோருக்கு பெரிய நன்றி! படம் சர்வதேச தரத்துக்கு இணையாக உள்ளது. திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது! இப்படம் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.