பிரபல இயக்குநர் ராம், எதார்த்தமான கதைகளைக் கொண்டு ரசிகர்களின் மனதை வென்றவர். அவர் ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’, ‘தரமணி’ போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது, ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், இதில் மிர்ச்சி சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளதுடன், யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை வழங்கியுள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.
இயக்குநர் ராம், முழுக்க முழுக்க நகைச்சுவை பின்னணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில், பிடிவாதமான சிறுவனும், பொருளாதார சிக்கலில் இருக்கும் அவனது தந்தையும் ஒரு பயணத்தில் சந்திக்கும் மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் சம்பவங்களால், கதைக்களம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தினை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்காக படக்குழு விண்ணப்பித்திருந்தது. தற்போது, இது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வரவிருக்கும் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் விழாவில் ‘பறந்து போ’ திரையிடப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, ‘பேரன்பு’ மற்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ போன்ற ராம் இயக்கிய படங்களும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.