மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில், இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் தாமதமாக வெளியானாலும், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள திரையுலகிற்கு திரும்பினார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் பலராலும் பாராட்டப்பட்டன.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான இசை விருதுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா அவார்ட்ஸ் (HMMAs) விழாவில், இந்த படத்தில் இடம்பெற்ற பெரியோனே என்கிற பாடல் சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோல், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான இசை பிரிவிலும் படத்தின் பின்னணி இசை பரிந்துரை செய்யப்பட்டது.
இதில், ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த விழாவில், ரஹ்மானின் சார்பில் இயக்குனர் பிளஸ்சி அந்த விருதை பெற்றுக் கொண்டார்.