Saturday, September 28, 2024

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரையரங்குகளுக்கு வர காத்திருக்கும் நான்கு திரைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்று சில மாதங்களுக்கு மிகப்பெரிய திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் ‘வேட்டையன், அமரன், கங்குவா, விடுதலை 2’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

வேட்டையன்
‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தில், அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகிணி, ராவ் ரமேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்து ‘என்கவுன்டர்’ கதையை மையமாக கொண்டதாகத் தோன்றுகிறது. ரஜினிக்கேயுரிய ஹீரோயிசம் படத்தில் இருக்குமா என்பது இப்போதைய கேள்வி. அது இருந்தால், இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தில் உள்ளது. அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம், ரஜினியின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் கூட இருக்கிறது.

அமரன்
2017ல் ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அதிரடி ஆக்ஷன் படமாக இருந்தாலும் பெரிதும் கவனிக்கப்படாமல் போனார். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, இவர் இயக்கும் புதிய படம் ‘அமரன்’. இது போரில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனை மையமாகக் கொண்ட பயோபிக் படமாகும். முகுந்தின் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் தயாரிக்கின்ற இந்தப் படம், தமிழில் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு வந்திருப்பது அபூர்வம். சினிமாவுக்குரிய அம்சங்களுடன் உண்மைக் கதையும் இணைந்தால், தீபாவளி வெளியீட்டுப் படங்களில் முதன்மையானதாக இருக்கக் கூடும்.

கங்குவா
சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடித்த ‘கங்குவா’ படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் வந்த முக்கியமான சரித்திரப் படங்களான ‘பொன்னியின் செல்வன்’ ஆகியவற்றிற்கு அடுத்ததாக, ‘கங்குவா’ வருகிறது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், காலதாமதம் ஆகிய சவால்களைத் தாண்டி உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘பாகுபலி’ வெற்றிக்கு பின், பான் இந்தியா அளவில் தமிழில் பெரிய படம் வெளிவராத நிலையில், ‘கங்குவா’ அதைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்த ‘விடுதலை 2’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. இரண்டாம் பாகம் கோடை விடுமுறையில் வெளிவரும் என எதிர்பார்த்தார்கள், ஆனால் படப்பிடிப்பு தாமதமாகி வெளியீடு தற்போது டிசம்பர் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியரின் புதிய கதாபாத்திரம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. முதல் பாகத்தின் வெற்றி இந்தப் பாகத்திற்கும் ஆதரவாக இருக்கும். விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘மகாராஜா’ படத்தின் வெற்றியும் கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News