‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து தீவிரவாதிகளுக்கு அடிமையகளாக மாற்றியதாகக் காட்டியதில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதில் அடா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நாடு முழுவதும் இத்திரைப்படம் எதிர்ப்புக்கு உள்ளாகி, சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்டது.

தற்போது, ‘தி கேரளா ஸ்டோரி’யின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும், கேரளாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கையை மையமாகக் கொண்டு படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து இயக்குநர் சுதிப்டோ சென்னிடம் கேட்டபோது, “திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்பது உண்மைதான். இதற்கான திரைக்கதை பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால், ஹேமா கமிட்டி அறிக்கையோடு எந்த சம்பந்தமும் இதற்கு இல்லை. இது பொய்யான தகவல்” என்று விளக்கமளித்தார். ‘தி கேரளா ஸ்டோரி’ 2-ம் பாகத்திலும் அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.