திருப்பதி கோவிலின் லட்டு விவகாரம் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த ‘மெய்யழகன்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில், தொகுப்பாளர் கார்த்தி, லட்டு பற்றி பேச துவங்கினார். ஆனால், கார்த்தி “லட்டு பற்றி பேச வேண்டாம். அது சென்சிட்டிவ்வான விஷயம்” என்று சிரித்தபடி கூறினார். இதற்கு ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் பத்திரிகையாளர்களிடம் தனது எதிர்ப்பை வெளியிட்டார். இதற்குப் பின்னர், கார்த்தி எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கோரி பதிவிட்டார்.
நேற்று இரவு பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் கார்த்திக்கும் ‘மெய்யழகன்’ படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்து, “உங்கள் விரைவான பதிலையும், நமது மரபுகளுக்குக் காட்டிய மரியாதையையும் நன்றியுடன் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் அதன் புனிதமான லட்டு பக்தர்களுக்கு மிக முக்கியமானது. இதுபோன்ற விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் சிந்தனைகளில் எந்த தவறும் இல்லை என்பதையும் புரிந்து கொள்கிறேன்.
நம் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக விழுமியங்களை மதித்து செயல்படுவது நமது பொறுப்பு. அதே நேரத்தில் சினிமா மூலம் விழுமியங்களை ஊக்குவிப்பதும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார். பவன் கல்யாணின் வாழ்த்திற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.