சமீபத்தில், நடிகை தீபிகா படுகோன், ஒரு நாளைக்கு எட்டே மணி நேரம் மட்டும் படப்பிடிப்பில் பங்கேற்க முடியும் என்பதற்காக, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்திலிருந்து விலகியிருந்தார். இந்த முடிவுக்குப் பின்னர் பாலிவுட்டில் இதைச் சுற்றி பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்புக்கு அளித்த பேட்டியில் நடிகை வித்யா பாலனிடம், தீபிகாவின் இந்த முடிவை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதிலில், “தாயாகிய பெண்களுக்கு குறைந்த நேரங்களில் அல்லது நெகிழ்வான முறையில் வேலை செய்ய அனுமதி அளிப்பது பற்றிய விவாதங்கள் இப்போது அனைத்து தொழில்துறைகளிலும் இடம்பெற்று வருகிறது. இதுபோன்ற விவாதங்களை நான் மிகவும் நியாயமானதாக கருதுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, “குழந்தை பெற்ற பெண்களைத் தொழில்துறையில் இழக்காமல் பாதுகாப்பதற்காகவே பல துறைகளும் இந்தப் பாணியில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்களை வழங்குவது என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. எனது நிலைமையை எடுத்துக்கொண்டால், நான் ஒரு தாயாக இல்லாததால், ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்க முடிகிறது. எனவே, ஒவ்வொருவரும் தங்களது சூழ்நிலைக்கு ஏற்பவே முடிவெடுப்பது சரியானது” என்றும் வித்யா பாலன் கூறியுள்ளார்.