Touring Talkies
100% Cinema

Thursday, August 14, 2025

Touring Talkies

திரையுலகில் வெற்றிகரமான 50 ஆண்டுகள்… தொடர்ந்து தங்கமாய் மின்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1950ம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தவர் ரஜினிகாந்த். திரையுலகில் நுழைவதற்கு முன்பு, பெங்களூரு போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றினார். அப்போது அவரது தனித்துவமான பாவனை, ஸ்டைல் மற்றும் பழக்கவழக்கங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன. பின்னாளில் சினிமா உலகில் முன்னணி ஆளுமையாக உயர்வதற்கான அனைத்து பண்புகளும் அப்போது அவரிடம் இருந்தன.

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்து, அவரது திரையுலக அறிமுகத்தை உலகிற்கு அறிவித்தது. தமிழ் சினிமாவில் எளிமையாக அறிமுகமான அவரை, ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற மகுடத்துடன் இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடக போக்குவரத்து துறையில் நடத்துனராக இருந்த காலத்தில், அரசு துறைகளுக்கிடையிலான கலை நிகழ்ச்சிகளில் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது நடிப்பை பார்த்த நண்பரும் சக ஊழியருமான ராஜ் பகதூர், அவரை சினிமாவில் நடிக்க வலியுறுத்தியதால், ரஜினிகாந்த் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தபின், ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களையே பெற்றார். பின்னர் வில்லன் வேடங்களிலும் நடித்தார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனித்துவத்தைப் பதித்து வந்த அவர், தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

வசன உச்சரிப்பு, ஸ்டைலான மேனரிசம் என தனித்துவ அடையாளத்துடன் பிரபலமான ரஜினிகாந்த், ‘பைரவி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ‘பைரவி’, ‘16 வயதினிலே’, ‘6 புஷ்பங்கள்’, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் அவர் பேசும் “இது எப்படி இருக்கு..” என்ற வசனம் இன்றும் பேசப்படுகிறது.

பின்னர், ‘தனிக்காட்டு ராஜா’, ‘போக்கிரிராஜா’, ‘பில்லா’, ‘முரட்டுக் காளை’, ‘ராணுவ வீரன்’ போன்ற படங்களின் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார். ‘பணக்காரன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘ஸ்ரீ ராகவேந்திரா’, ‘மிஸ்டர் பாரத்’, ‘படிக்காதவன்’, ‘ஊர்க்காவலன்’, ‘வேலைக்காரன்’, ‘ராஜாதி ராஜா’ ஆகிய படங்கள் அவரது கேரியரில் முக்கியத்துவம் பெற்றன. அதிரடி மற்றும் சண்டை காட்சிகளில் முன்னணியில் இருந்த ரஜினிகாந்த், நகைச்சுவை படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்தது ‘தில்லு முல்லு’ திரைப்படம். கே. பாலசந்தர் இயக்கிய இந்த படம், இன்று வரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரஜினிகாந்த் எப்போதும் தனது ஸ்டைலுக்கு முக்கியத்துவம் அளித்தார். சிகரெட்டை தூக்கி வாயில் பிடிப்பது, தலையை கோதுவது, துப்பாக்கியை சுழற்றுவது போன்றவை அவரது அடையாள ஸ்டைலாக ரசிகர்களால் விரும்பப்பட்டன. அவரது நடை, பேச்சு ஆகியவற்றுக்கு குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர் என்பது மிகையல்ல. அவரது ஸ்டைலைப் புகழ்ந்து பல பஞ்ச் டயலாக்குகள், பாடல்கள் உருவானது. “ஸ்டைலு ஸ்டைலுதான், இது சூப்பர் ஸ்டைலுதான்”, “வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டு போகல” போன்ற வசனங்கள் அவருக்காகவே எழுதப்பட்டவை. ஒருகட்டத்தில், ரஜினி நடித்தாலே படம் வெற்றி பெறும் நிலை உருவானது. ‘எஜமான்’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ போன்ற படங்களின் தொடர்ச்சியான வெற்றிகள் அவரை வசூல் மன்னனாக உயர்த்தின.

‘பாபா’, ‘குசேலன்’ போன்ற சில படங்களில் தோல்விகள் இருந்தாலும், அவர் அசராமல் மீண்டும் வெற்றிப்பாதையைத் தொடர்ந்தார். ‘எந்திரன்’, ‘கபாலி’, ‘2.0’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகள் படைத்தன. தற்போது, அவரது திரையுலக பொன்னாண்டில் வெளியாகும் ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இதுவரை, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் அவர் நடித்த ‘பிளட் ஸ்டோன்’ 1988ல் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்ற விருதுகள்: 1984ல் தமிழக அரசின் கலைமாமணி விருது, 1989ல் எம்.ஜி.ஆர் விருது, 2007ல் மராட்டிய அரசின் ராஜ்கபூர் விருது, 2011ல் எம்.ஜி.ஆர்-சிவாஜி விருது, 2000ல் பத்மபூஷண், 2016ல் (4-12-2016) பத்மவிபூஷண் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

‘முள்ளும் மலரும்’, ‘மூன்று முகம்’, ‘முத்து’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ உள்ளிட்ட ஆறு படங்களுக்கு தமிழ்நாடு மாநில விருது கிடைத்துள்ளது. ஆறிலும் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார். சினிமாவின் உயரிய கௌரவமான தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார். 50 ஆண்டுகளைக் கடந்தும் அவர் இன்னும் உச்ச நட்சத்திரமாக ஒளிர்வதற்கான காரணம், அவர் சந்தித்த சவால்களை தன்னம்பிக்கையுடன் சமாளித்த விதமே. இது, திரையுலகில் சாதிக்க விரும்பும் பலருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

- Advertisement -

Read more

Local News