பிரதீப் சர்க்கார் இயக்கிய ‘பரினீதா’ (2005) திரைப்படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவத்தை நடிகை வித்யா பாலன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். அந்தப் படத்தின் ஒரு காட்சியில் நடிக்க, அவர் மொத்தம் 28 டேக்குகள் எடுத்ததாக கூறினார்.

வித்யா பாலனின் பாலிவுட் திரையுலகப் பயணம் ‘பரினீதா’ திரைப்படத்துடன் துவங்கியது. இந்த படம் 2005 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. சரத் சந்திர சட்டோபாத்யாய் எழுதிய 1914ஆம் ஆண்டின் பெங்காலி நாவல் ‘பரினீதா’வை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் சஞ்சய் தத் மற்றும் சயிப் அலி கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். பிரதீப் சர்க்கார் இயக்கிய இந்த படம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 29ஆம் தேதி மறுபடியும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், “நான் பிரதீப் சர்க்காரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கவனித்து, அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். தேவைப்பட்டால் 100 டேக்குகளையும் எடுப்பார். ஒரு பாடல் காட்சியில் நான் அழ வேண்டும். அந்த பாடலில் ஒரு குறிப்பிட்ட வரி வரும் போது என் கண்ணீர்த் துளி விழ வேண்டும். இதற்காகவே 28 டேக்குகள் எடுக்கப்பட்டது. சயிப் எப்போதும் மிகவும் வேடிக்கையானவர். எப்போதும் என்னைச் சிரிக்க வைப்பார். இன்னும் அந்த சம்பவத்தை நினைத்தாலே எனக்கு சிரிப்பு வருகிறது” என்று தெரிவித்தார்.