ரவுடிகளிடமிருந்து தப்பித்து குழந்தையுடன் ஊட்டியில் தஞ்சமடைகிறார் சூர்யா (விஜய் ஆண்டனி). பிரசவத்தின்போது மனைவி இறந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், தனியாகவே குழந்தையை வளர்த்து வருகிறார். அவரை ஒருதலையாகக் காதலிக்கும் குழந்தையின் ஆசிரியை அனிதா (ப்ரீத்தி அஸ்ரானி), இறந்துவிட்டதாக நினைத்த சூர்யாவின் மனைவி உயிருடன் ஊட்டிக்கு வருவதைப் பார்க்கிறார். அவர் எப்படி உயிருடன் வந்தார், சூர்யா ஏன் சென்னையை விட்டு வெளியேறினார், அனிதாவின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
செண்டிமெண்ட் கதைகளில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை விஜய் ஆண்டனி மீண்டும் நிரூபித்துள்ளார். முதல் பாதியில் பாசமான தந்தையாகவும், இரண்டாம் பாதியில் அதிரடி காட்டும் தந்தையாகவும் கவனிக்க வைக்கிறார். சிறுமி லிதன்யாவின் துறுதுறுப்பான நடிப்பும் படத்திற்குப் பலம்.
ப்ரீத்தி அஸ்ரானி முதல் பாதியில் கவனிக்க வைக்கிறார். விஜய் ஆண்டனியின் நண்பராக வரும் முருகானந்தத்தின் நகைச்சுவை இரண்டாம் பாதியில் படத்திற்கு உற்சாகம் சேர்க்கிறது. ஹரிப்பிரியா, பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
குழந்தை மீதான பாசத்தைப் பல காட்சிகளில் காட்டினாலும், அந்தக் குழந்தை சூர்யாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் காட்சிகள் இல்லாதது திரைக்கதையின் பலவீனம். சில சம்பவங்கள் யதார்த்தத்தை மீறி நாடகத்தனமாக அமைந்துள்ளன. முதல் பாதியின் காதல் கதையிலிருந்து இரண்டாம் பாதி வேறு திசையில் பயணிப்பதும், சில காட்சிகள் நீளமாக இருப்பதும் சற்று சோர்வை ஏற்படுத்துகின்றன.
இருப்பினும், இறுதி 20 நிமிட நீதிமன்றக் காட்சிகள் படத்தின் குறைகளை மறக்கச் செய்கின்றன. விஜய் ஆண்டனியின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும், கிளைமாக்ஸ் காட்சிகளும் ரசிகர்களைக் கண்கலங்க வைக்கின்றன. குறிப்பாக, அவரது கெஞ்சல் நிறைந்த நடிப்பு பார்வையாளர்களையும் கதைக்குள் இழுத்துச் செல்கிறது.
