வழக்கறிஞராகப் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் சாவித்திரி, திருமணத்தில் ஆர்வமின்றி தனது கனவை நோக்கிச் செல்கிறார். எதிர்பாராத சூழலில் ஐடி நிறுவனத் தலைவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் அவர், பின்னர் கணவர் மீது காதல் கொண்டு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்கிறார்.
தனது மூத்த வழக்கறிஞரையே எதிர்த்து ஒரு கடினமான வழக்கில் வெற்றி பெறும் சாவித்திரி, வேலைப்பளு மற்றும் உடல்நல அலட்சியத்தால் சிக்கல்களைச் சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டு கணவருடன் வாழ்க்கையைச் சீரமைக்க முயற்சிக்கும் நேரத்தில், கணவர் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார். அவரைக் காப்பாற்றி நிரபராதி என்பதை நிரூபிக்க சாவித்திரி நடத்தும் சட்டப் போராட்டமே படத்தின் மீதிக்கதை.
சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார். உற்சாகமான இளம்பெண்ணாகத் தொடங்கி, வாழ்க்கையின் சோதனைகளை எதிர்கொண்டு மனதளவில் வலிமையான பெண்ணாக மாறும் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மூத்த வழக்கறிஞராக வரும் மிஷ்கின் தனது வழக்கமான உடல்மொழியுடன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்துள்ளார். கணவராக நடித்த சாருகேசும் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
முதல் பாதியில் காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை என நிதானமாக நகரும் திரைக்கதை, இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றப் போராட்டமாக வேகம் எடுக்கிறது. தொடக்கத்தில் சில இடங்களில் மெதுவாக நகர்வது குறையாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் மர்மங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் விதம் சுவாரஸ்யமாக உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழிலையும் சமநிலையுடன் கையாள வேண்டியதன் அவசியத்தையும் படம் பதிவு செய்கிறது. நம்பிக்கை வைத்த இடத்திலிருந்தே துரோகம் வரும்போது ஏற்படும் வலியைப் பேசும் வசனங்களும் கவனம் பெறுகின்றன. நீதிமன்றக் காட்சிகளை இயக்குநர் பிரவின் எஸ். விஜய் சுவாரஸ்யமாக அமைத்துள்ளார்.
அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளையும் நீதிமன்றக் காட்சிகளையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. சாம் சி.எஸ். இசையும் பின்னணி இசையும் உணர்ச்சிகரமான மற்றும் பதற்றமான காட்சிகளுக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பம் படத்திற்கு நல்ல நிறைவைத் தருகிறது. மொத்தத்தில், கீர்த்தி சுரேஷின் நடிப்பு, சுவாரஸ்யமான நீதிமன்றப் போராட்டம், உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகியவை ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தை ரசிக்க வைக்கின்றன.
