குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். தொடர்ந்து, என்ன சொல்லப் போகிறாய், செம்பி, ஹாட்ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். சினிமாவில் அடுத்தகட்ட வாய்ப்புகளுக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது அவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
கோவையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் அஸ்வின், தனது நீண்ட நாள் காதலியான புவனேஸ்வரியை மணந்துள்ளார். மணப்பெண் புவனேஸ்வரி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ராஜசேகரின் பேத்தி என்று கூறப்படுகிறது.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அஸ்வினின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
