கேரளாவின் சின்னக்கனல், இடுக்கி பகுதிகளில் உணவு தேடி வீடுகள், கடைகளைச் சேதப்படுத்திய யானை அரிகொம்பனின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘அரி’ என்றால் அரிசி, ‘கொம்பன்’ என்றால் கொம்புடைய யானை. இதன் அடிப்படையிலேயே அந்த யானைக்கு அரிகொம்பன் எனப் பெயர் வந்தது.
அரிகொம்பனின் தொல்லை அதிகரித்ததால் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட யானை, பெரியாறு தேசியப் பூங்காவிலும் பின்னர் தமிழகத்தின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியிலும் விடப்பட்டது.
இந்தச் சம்பவங்களை மையமாகக் கொண்டு ‘அரிகொம்பன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. மிதுன் மகேஸ்வரன் இயக்கி நாயகனாக நடித்துள்ளார். மேஜிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தேவிகா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜய் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.
