நடிகை ஸ்ருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட விசித்திரமான சம்பவம் ஒன்றைப் பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மும்பையில் உள்ள தனது வீட்டில் நடந்ததாகக் கூறப்படும் மர்ம நிகழ்வை நினைவுகூர்ந்தார்.தனது வீட்டில் பியோனா என்று பெயரிட்டு வைத்திருந்த ஆளுயரப் பொம்மை, யாருடைய உதவியும் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் நகர்ந்து காணப்பட்டதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்த பொம்மை சில நேரங்களில் வேறு திசையில் திரும்பியிருப்பதையும், மாறுபட்ட நிலைகளில் இருந்ததையும் கவனித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சில இடங்களில் நிலவும் அமைதியற்ற அல்லது எதிர்மறையான ஆற்றலைத் தன்னால் உணர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசியபோது, “ஒரு இடத்தில் வித்தியாசமான ஆற்றல் இருந்தால் அதை என்னால் உணர முடியும். இது எப்போதும் நடப்பதில்லை; சில நேரங்களில் மட்டுமே ஏற்படும். சென்னையில் இருக்கும் எனது வீட்டில் மிகவும் அமைதியான, சமநிலையான சூழல் நிலவுகிறது. ஆனால் மும்பை வீட்டில் ஏதோ சரியில்லாதது போலவும், சந்தேகத்துக்குரிய சம்பவங்கள் நடப்பது போலவும் எனக்குத் தோன்றியது” என்று தெரிவித்துள்ளார்.
ஒருகட்டத்தில் அந்தப் பொம்மையை வீட்டிலிருந்து அகற்றிவிட முடிவு செய்ததாகவும் ஸ்ருதி கூறியுள்ளார். அதற்காக அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்ததுடன், கையில் உப்பை வைத்துக்கொண்டு பொம்மையைப் பிரித்து அப்புறப்படுத்திய பிறகே வீட்டைப் பூட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே உரையாடலில் தனது ஆன்மிகப் பார்வை குறித்தும் ஸ்ருதி ஹாசன் மனம் திறந்துள்ளார்., தன்னைப் பொறுத்தவரை நான் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு நபர் என்று அவர் தெரிவித்துள்ளார். விக்கா மற்றும் இயற்கையை வழிபடும் மரபுகள் மீதான தனது ஈடுபாடு குறித்தும் பேசிய அவர், அந்த ஆர்வம் பெண்களின் முன்னோர்கள் தொடர்பான வரலாறுகளையும் ஆன்மிக அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் தேடலுக்கு வழிவகுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
