‘பிளாக் கோல்ட்’ திரைப்படம் எப்படி இருக்கு?- திரைவிமர்சனம்!

மாரிமுத்து (லிவிங்ஸ்டன்), தங்கம் (ஏ. வெங்கடேஷ்) நடத்தும் முன்னணி முடி ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்கிறார். தந்தை தொடர்ந்து உழைப்பதைப் பார்க்கும் அவரது மகன் விஜய் (வெற்றி), அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இந்த நிலையில், திருப்பதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள முடிப் பொதியை உரிய இடத்தில் சேர்க்கும் பொறுப்பு மாரிமுத்துவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், பயணத்தின் பாதியிலேயே லாரியுடன் அவரும் மாயமாகிவிடுகிறார். இதையடுத்து போலீஸ் விசாரணை தொடங்க, மாரிமுத்து சந்தேக வளையத்துக்குள் சிக்குகிறார். தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க மகன் விஜய் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் மீதிக்கதையாக விரிகின்றன.

படத்தின் கதைக்களத் தேர்வு வழக்கமான குற்றப் பின்னணிப் படங்களிலிருந்து மாறுபட்டிருக்கிறது. தங்கம், வைரம், போதைப்பொருள் போன்றவற்றைச் சுற்றி ஏற்கெனவே பல கதைகள் சொல்லப்பட்டுள்ள நிலையில், அதிகம் பேசப்படாத முடி ஏற்றுமதித் துறையை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார். இந்தத் தொழிலின் பின்னணியைத் திரைக்கதைக்கான அடிப்படையாகத் தேர்ந்தெடுத்திருப்பது படத்தின் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.

வெற்றி தனது வழக்கமான நடிப்புப் பாணியில் சுமாரான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். எதிர்மறைத் தன்மை கொண்ட கதாபாத்திரங்களில் வரும் ஏ. வெங்கடேஷ், அருள், ஜப்பான் ஆகியோர் தங்களது நடிப்பின் மூலம் மிரட்ட முயற்சிக்கின்றனர். லிவிங்ஸ்டன், துளசி, அபிராமி வெங்கடாச்சலம், பிரியலயா உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்ய முயன்றுள்ளனர்.

புதுமையான தொழிலையும், அதனைச் சுற்றிய குற்றச் சம்பவங்களையும் கதையின் மையமாக வைத்திருந்தாலும், அதைத் திரையில் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லத் தவறியிருப்பதே படத்தின் முக்கிய பலவீனம். பெரும்பாலான காட்சிகள் கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையவில்லை. தேர்ந்தெடுத்த களத்துக்கு ஏற்ற விறுவிறுப்பான திரைக்கதையும், சுவாரஸ்யமான காட்சிகளும் இடம்பெற்றிருந்தால், இது குறிப்பிடத்தக்க த்ரில்லர் படமாக உருவெடுத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

Add a Comment

Leave a Reply