‘மரகத நாணயம் 2’ உங்களை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும்… இயக்குனர் ஏ.ஆர்.கே‌.சரவணன்!

2017-ல் வெளியான ‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர்.கே. சரவணன், தற்போது அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். ஆதி, பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் பாகம் குறித்துப் பேசிய இயக்குநர், “சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதற்கெனத் தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இந்தப் பாகத்திலும் இணைந்துள்ளனர். ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனி போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ், முருகானந்தம் எனப் பலரும் நடித்துள்ளனர். இவர்களுடைய கதாபாத்திரங்கள் கதையில் எப்படித் தொடர்புபடுகின்றன, அனைவரும் எந்த இடத்தில் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்குப் படத்தில் ஆச்சரியமாக இருக்கும்.

முதல் பாகத்தில் ரசித்த நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் ஆகிய அம்சங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடரும். இதனுடன் மேலும் பல சுவாரஸ்யங்களும் இடம்பெற்றுள்ளன. முதல் பாகத்தில் நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்தது. அதேபோல், இந்தப் பாகத்திலும் அவருக்கு வலுவான, தனித்துவமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதை ரசிகர்கள் படம் வெளியாகும்போது தெரிந்துகொள்வார்கள்” என்றார்.

Add a Comment

Leave a Reply