விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இரும்புத்திரை’. சமந்தா கதாநாயகியாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்திருந்த இப்படம், டிஜிட்டல் மோசடிகள் மற்றும் தனிநபர் தகவல் திருட்டு போன்ற சைபர் குற்றங்களை மையமாகக் கொண்டு உருவாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வந்தது. தற்போது ‘இரும்புத்திரை 2’ படத்திற்கான திரைக்கதைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தெரிவித்துள்ளார். இதில் விஷால் மீண்டும் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கத் திட்டமிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ம் ஆண்டு தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் பாகத்தில் சைபர் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பண மோசடிகளைப் பேசிய இயக்குநர், இரண்டாம் பாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாகும் புதிய குற்றங்களை மையமாகக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படக்கூடிய தகவல் திருட்டு, போலி அடையாளங்கள், ஹேக்கிங் உள்ளிட்ட அபாயங்கள் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
