‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவானா. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளப் படங்களில் நடித்த அவர், பின்னர் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்கள் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். தற்போது ஜீவாவுடன் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்துப் பேசிய இவானா, “காதலும் நகைச்சுவையும் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பைப் போலவே முழுப் படமும் ஜாலியாக இருக்கும். காதல் உறவு தொடங்கி திருமணம் வரை நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் சிக்கல்களையும் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம்.
ஒவ்வொரு படத்திற்கும் இடையில் நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்வது ஏன் எனப் பலரும் கேட்கிறார்கள். நான் மிகவும் கவனமாகக் கதைகளைத் தேர்வு செய்கிறேன். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்த எனக்கு நடிகையாவேன் என்ற எண்ணமே இருந்ததில்லை. ஆனால், சினிமாவுக்கு வந்து தமிழில் நல்ல இடம் கிடைத்தது. முதல் படமே பாலா இயக்கத்தில் அமைந்தது. ‘லவ் டுடே’ எனது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருந்தது.
அதிகமான படங்களில் நடிப்பதைவிட, தரமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். ஒரு கதையைக் கேட்கும்போது அது எனக்குப் பொருத்தமாக இருக்கிறதா, அந்தக் கதாபாத்திரத்தை என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்பதைப் பார்க்கிறேன். திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமாவில் இருப்பேனா என்பது தெரியாது. ஆனால், இவானா என்ற நடிகை இருந்தார், நல்ல படங்களில் நடித்தார் என்ற பெயர் கிடைத்தால் போதும்” என்றார்.
