ராயல்டி சர்ச்சை – நடிகரும் பாடகருமான டீஜேவின் விளக்கம்!

பின்னணிப் பாடகி பிரகதியுடனான ராயல்டி பிரச்சினை குறித்து நடிகரும் பாடகருமான டீஜே அருணாசலம் விளக்கம் அளித்துள்ளார். இருவரும் இணைந்து பாடிய பாடல்களுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை எனப் பிரகதி சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்து டீஜேவும் தனது தரப்பு விளக்கத்தைப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், புதிய பாடல் தொடர்பான பேட்டியில் இந்தச் சர்ச்சை குறித்து அவர் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது: எங்களுடைய கூட்டணி 2015ஆம் ஆண்டு தொடங்கியது. 2016இல் வெளியிட்ட மியூசிக் வீடியோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுவரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. 2018ஆம் ஆண்டு ‘நகிலா நகிலா’ பாடல் வெளியான பிறகுதான் முதன்முறையாகப் பணம் குறித்துப் பேசினார். அப்போது படப்பிடிப்பில் இருந்ததால், பிறகு தொலைபேசியில் பேசலாம் என்று கூறினேன்.

அதன்பிறகு 2025 மே மாதம் வரை இந்த விவகாரம் குறித்து அவர் பேசவில்லை. ஆனால், 2025இல் திடீரென ‘நகிலா நகிலா’ மற்றும் ‘தேன் குடிக்க’ ஆகிய பாடல்களுக்குப் பணம், ஸ்பிளிட் ராயல்டி கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.இதற்கு எங்கள் வழக்கறிஞர் மூலமாகச் சட்டப்பூர்வமாகப் பதிலளித்தோம். 2022ஆம் ஆண்டு சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பிறகுதான் ஒப்பந்த நடைமுறைகள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டேன். ராயல்டி உரிமை பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் ஆகியோருக்குத்தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாடகர்களுக்கும் அந்த உரிமை உள்ளதா என்று IPRS அமைப்பிடம் விசாரித்தேன். அவர்களும் அத்தகைய உரிமை இல்லை என்றே தெளிவுபடுத்தினர்.

எங்களுடைய விளக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய பாடல் வெளியாகும் நேரத்தில் இந்தப் பிரச்சினையைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததைத் தவறான அணுகுமுறையாகப் பார்க்கிறேன். இதைச் சட்டரீதியாகவோ தொழில்முறை ரீதியாகவோ கையாண்டிருக்கலாம். இந்த விவகாரம் என்னைப் பெரிதும் பாதித்துள்ளது. வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்” என்றார்.

Add a Comment

Leave a Reply