தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட் படத்தில் கலேஷ் ராமானந்த் கதாநாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கேரளத்திலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் இளைஞர் ஒருவர் புதிய வீட்டில் குடியேறியதும் அமானுஷ்ய சம்பவங்களை எதிர்கொள்கிறார். அந்தச் சம்பவங்களின் பின்னணி என்ன, அதிலிருந்து இருவரும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை. இதனை இயக்குநர் அபய் சங்கர் ஹாரர் த்ரில்லராக உருவாக்கியுள்ளார்.
நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியான கலாரஞ்சினி, கதாநாயகனின் தாயாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்ய, ஐயப்பன் நாயர் எம்.எஸ். படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஜாக்கி ஜான்சன் புராஜெக்ட் டிசைனராகவும், தீபு சந்திரன் விஎஃப்எக்ஸ் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தை 2027 ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
