ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தில் மம்முட்டி, நஸ்ருதீன் ஷா, ஸ்ரீலீலா, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தனுஷ், மம்முட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மம்முட்டி, ‘ஓம்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான பின்னணியைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசுகையில், “கடந்த 6 ஆண்டுகளாக தமிழில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கேட்டு வந்தேன். ஆனால், யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், சில நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டேன். படக்குழுவினரும் எனக்காகக் காத்திருந்தார்கள். அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க முடிந்தது. முதலில் ஒரு மாதம் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால், 6 மாதங்கள் இரவு, பகல் பாராமல் வேலை வாங்கிவிட்டார்கள். இந்தப் படத்தில் எனக்கு ஒரு ஜோடி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என்று நகைச்சுவையாக பேசினார்.
