‘ஸ்ட்ரீ 2’ வெற்றிக்குப் பிறகு பட வாய்ப்புகளை நிராகரித்தது ஏன்? – ஷ்ரத்தா கபூர் விளக்கம்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். இவர் கடைசியாக ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடும் இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.அப்போது, ‘ஸ்ட்ரீ 2’ வெற்றிக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்காமல் இருந்தது ஏன் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஷ்ரத்தா கபூர், அந்தப் படத்திற்குப் பிறகு அதிக சம்பளத்துடன் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் கதைகள் பிடிக்காததால் அவற்றை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “‘ஸ்ட்ரீ 2’ படத்திற்குப் பிறகு அதிக சம்பளத்துடன் பல பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், சரியான கதை கிடைக்கும் வரை எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகக் கூடாது என்று முடிவு செய்தேன். பொறுமையாக இருக்க வேண்டும் என்று என் மனம் சொன்னது. அதன்படியே நடந்துகொண்டேன்.

நாம் மிகவும் விரும்பும் ஒன்றுக்காகக் காத்திருப்பது கடினம்தான். ஆனால், காத்திருக்க முடிவு செய்ததற்காகப் பெருமைப்படுகிறேன். எப்போதும் உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். சில நேரங்களில் அது கடினமாக இருந்தாலும், அதற்காகக் காத்திருப்பது மதிப்புக்குரியது” என்று கூறினார். இதற்கிடையில், நாட்டுப்புற நடனக் கலைஞர் விதாபாய் நாராயணகான்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஈதா’ திரைப்படத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply