தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய படத்தையும் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில், ‘கட்சி சேர’ பாடல் மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், முதலில் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
