‘சீன்’ திரைப்படம் எப்படி இருக்கு? -திரை விமர்சனம்!

கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சூர்யா, அந்தப் பணியிலிருந்து விலக நினைக்கிறார். இதற்காக முடிந்தவரை அனைவரிடமும் வெறுப்பைச் சம்பாதிக்கும் வகையில் நடந்துகொள்கிறார். இந்தச் சூழலில் நகரில் அடுத்தடுத்து படுகொலைகள் நடக்கின்றன. முன்பு சூர்யா போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது வேட்டையாடிப் பிடித்த சைக்கோ கொலையாளி கொலை செய்த அதே பாணியில் இந்தக் கொலைகளும் அரங்கேறுகின்றன.

இதனால், சூர்யா கைது செய்தது உண்மையான குற்றவாளி அல்ல என்றும், உண்மையான கொலையாளி இன்னும் வெளியில் இருக்கிறான் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தனது திறமையின் மீது நம்பிக்கை இல்லாததால்தான் இத்தகைய சந்தேகம் எழுந்துள்ளது என நினைக்கும் சூர்யா, உண்மையான கொலையாளியைப் பிடிக்கத் திட்டமிடுகிறார். இதற்காகத் தனியாக ஒரு குழுவையும் அமைக்கிறார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவுக்குக் கண் பார்வை இல்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மை போலீசாருக்குத் தெரிய வருகிறது. அதே நேரத்தில், இந்த வழக்கில் சூர்யா வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கில் போலீசாரும் அவரைக் கண்காணிக்கின்றனர். கண் பார்வையற்ற நிலையில், காவல்துறையிலிருந்து விலக நினைக்கும் சூர்யா உண்மையான குற்றவாளியைப் பிடித்தாரா? அந்தக் கொலையாளி யார்? கொலைகளின் பின்னணி என்ன? என்பதற்கான விடைகளே படத்தின் மீதிக்கதை.

சூர்யா ஒட்டுமொத்தப் படத்தையும் தனது நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார். அழுத்தமான நடிப்புடன், ஜாலியான உடல்மொழியிலும் கவர்கிறார். கொலையாளியைக் கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆச்சரியமளிக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்பியுள்ள நஸ்ரியா, தனது கலகலப்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.மலையாள நடிகர் நஸ்லென் வில்லத்தனமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். அதேபோல், டோவினோ தாமஸும் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டியுள்ளார். ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடித்துள்ளனர்.

வினித் அகஸ்தியனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்குப் பரபரப்பைக் கூட்டுகிறது. சுஷின் ஷியாமின் இசை படத்துடன் ஒன்றிப் பயணிக்கிறது. விறுவிறுப்பான காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. அதேவேளையில், சில நம்ப முடியாத காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். வழக்கமான கிரைம் கதையாக இருந்தாலும், புதுமையான காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஜீத்து மாதவன்.

Add a Comment

Leave a Reply