தணிக்கை வாரியத்தின் 18 உறுப்பினர்களைக் கொண்ட குழு சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்படங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, படங்களின் தலைப்புகளை ஆய்வு செய்வதுடன், விதிமுறைகளுக்கு முரணாக இருந்தால் அவற்றை மாற்றவும் தணிக்கைக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சினிமாடோகிராஃப் சட்டம் 1952 மற்றும் சினிமாடோகிராஃப் விதிகள் 2024 ஆகியவற்றின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் தலைப்புகளைத் தணிக்கை வாரியத்தில் பதிவு செய்திருந்தாலும், அவை இறுதியானவை என்று கருத முடியாது. விளம்பரங்கள், டீசர்கள், டிரெய்லர்கள் என எந்த வடிவத்தில் தலைப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், அவை தணிக்கைக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதினால், தலைப்பை மாற்றுமாறு குழு அறிவுறுத்தலாம்.
தற்காலிக பின்னணி இசை அல்லது முழுமையடையாத கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்ட படங்களைத் தணிக்கைக்கு அனுப்பக் கூடாது. கிராபிக்ஸ், ஒலிக்கலவை, வசன வரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்ட படங்களையே சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.
படத்தின் வெளியீட்டுத் தேதியை முன்கூட்டியே அறிவித்திருந்தாலும், அதற்காகத் தணிக்கை நடைமுறைகளை வாரியம் விரைவுபடுத்தாது. சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படியே சான்றிதழ் வழங்கப்படும். எனவே, திட்டமிட்ட வெளியீட்டுக்கு முன்பே போதிய கால அவகாசத்துடன் விண்ணப்பிக்குமாறு தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’, ‘மாத்ருபூமி’ உள்ளிட்ட படங்களின் தலைப்புகள் தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தலின்படி மாற்றப்பட்டுள்ளன.
