தமிழகத்தில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை ஆறு காட்சிகள் திரையிட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் இன்று காலை 6 மணிக்குத் திரையரங்குகளில் வெளியானது.
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இதில் நஸ்ரியா கதாநாயகியாகவும், நஸ்லென் வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
இதனுடன், சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் அதிகாலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்துடன் படங்களைப் பார்க்கத் திரையரங்குகளுக்குச் சென்று வருகின்றனர்.
