சினிமாவில் எனக்கு யாரும் போட்டி கிடையாது – நடிகை கீர்த்தி ஷெட்டி டாக்!

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி, தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘எல்.ஐ.கே.’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரவி மோகனுடன் அவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவும் அவர் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது

திரையுலகில் தனது வளர்ச்சி குறித்துப் பேசிய கீர்த்தி ஷெட்டி, “எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் இந்தத் துறைக்கு வந்தேன். இன்றும் கதாநாயகியாகத் தொடர்ந்து நடிப்பது இயற்கையும் இறைவனும் எனக்கு அளித்த ஆசீர்வாதமாகவே கருதுகிறேன். தெலுங்குப் படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமா மீதும் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. தமிழ் ரசிகர்கள் காட்டும் அளவற்ற அன்புதான் அதற்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போட்டி மனப்பான்மை குறித்துப் பேசுகையில், “நான் யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. அந்த எண்ணமே எனக்குத் தேவையில்லை. சினிமாவில் எதற்காகப் போட்டியும் பொறாமையும் இருக்க வேண்டும்? நமக்கான வேலையைச் சரியாகச் செய்துகொண்டு செல்ல வேண்டும். ‘எனக்குப் போட்டி நான்தான்’ என்று ரஜினிகாந்த் ஒருமுறை மேடையில் கூறியிருக்கிறார். அவரைப் போன்ற பெரிய கலைஞரே அப்படிச் சொல்லும்போது, நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகுவதே எனது இயல்பு. எனவே, மற்றவர்களுடன் போட்டி போடுவதைவிட எனது முந்தைய படங்களைவிடச் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன். அதிர்ஷ்டம் சில நேரங்களில் உதவலாம். ஆனால், அதற்காக உழைப்பை நிறுத்திவிடக் கூடாது. தொடர்ந்து உழைத்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த தனது கவலையையும் அவர் பகிர்ந்துள்ளார். “இது என்னை மட்டுமல்ல, அனைத்து நடிகைகளையும் அச்சுறுத்தும் விஷயமாக இருக்கிறது. எது உண்மை, எது போலி என்று கண்டறிய முடியாத அளவுக்கு சமூக வலைதளங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது சினிமாவுக்கு மிகப்பெரிய ஆபத்து. சமீபத்தில் நானும் இதுபோன்ற பாதிப்பை எதிர்கொண்டேன். நடிகைகளுக்கே போலியான ஆபாசப் படங்கள், வீடியோக்கள் மூலம் பாதிப்பு ஏற்படும்போது, சாதாரண பெண்களும் கல்லூரி மாணவிகளும் இதை எப்படிச் சமாளிப்பார்கள்? இதுபோன்ற செயல்களைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தனது எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேசிய அவர், “எனது திரைப்பயணத்தில் பல சவால்களைச் சந்தித்திருக்கிறேன். ஆரம்பத்தில் இந்தத் துறையில் என்னால் நீடிக்க முடியுமா என்ற சந்தேகம்கூட இருந்தது. ஆனால், படங்களுக்குக் கிடைத்த வெற்றியும் எனக்குள் இருந்த நம்பிக்கையும்தான் தொடர்ந்து பயணிக்க உதவின. ஒரு நல்ல வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கேற்ற கதை கிடைக்கும் என நம்புகிறேன். தற்போது நடிப்பில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறேன். என்னைப் புரிந்துகொண்டு, பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன், எப்போதும் நேர்மறையான எண்ணங்களைக் கொண்ட ஒருவரைச் சந்தித்தால் காதலிக்கலாம். ஆனால், இதுவரை அப்படிப்பட்ட ஒருவரைச் சந்திக்கவில்லை. இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply