சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாளத்தில் ‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ உள்ளிட்ட படங்களைக் கொடுத்த ஜித்து மாதவன், இப்படத்தின் கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார். இதில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சூர்யா, தனது திரைப்பயணம், ரசிகர்களின் அன்பு மற்றும் படக்குழுவினர் குறித்துப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தனது முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்திற்கு இசையமைத்த தேவாவை நினைவுகூர்ந்து பேசிய சூர்யா, “என்னுடைய முதல் படத்திற்கு தேவா சார்தான் இசையமைத்தார். இந்த மேடையின் வாயிலாக அவருக்கு என்னுடைய பிரார்த்தனைகளையும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ரசிகர்களுடனான தனது நீண்டகால உறவு குறித்துப் பேசியவர், “கடந்த 29 ஆண்டுகளாக அன்பு குறையாமல் என்னை இந்த மேடையில் நிற்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இன்றுவரை அந்த அன்பைப் பின்பற்றி வருகிறீர்கள். மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தருகிறது” எனத் தெரிவித்தார்.
இயக்குநர் ஜித்து மாதவனின் முந்தைய படங்கள் குறித்துப் பேசிய சூர்யா, “நானும் ஜோதிகாவும் ‘ரோமஞ்சம்’ படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். ‘ஆவேசம்’ படமும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜித்து உருவாக்கும் உலகம் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக இருக்கும். அவர் தமிழில் நேரடியாக ஒரு படம் இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அது உடனடியாக நடந்தது மகிழ்ச்சி” என்றார்.
நஸ்ரியாவின் நடிப்பு குறித்துப் பாராட்டிய அவர், “12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் நடித்திருக்கிறார். நஸ்ரியா நடிக்கிறார் என்பதே தெரியாத அளவுக்குச் சிறிய முகபாவனைகளிலேயே நகைச்சுவையை வெளிப்படுத்திவிடுவார். ‘மாயா’ கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமான தேர்வு” என்று குறிப்பிட்டார். படத்தின் கதைக்களம் குறித்துப் பேசிய சூர்யா, “கொலை, மர்மம், சைக்கோத்தனம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த சுவாரஸ்யமான கதையாக இது இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகத் திரும்பலாம். இந்தத் தீபாவளி உங்களுக்கு அழகான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இறுதியாக நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, “நம்முடைய படம் தீபாவளிக்கு வெளியாவதால், தனது படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைப்பதாக தனுஷ் அவரே சமூக வலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்தியிருந்தார். அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
