சூர்யாவின் 49-வது படத்தை இயக்குகிறாரா மண்டாடி இயக்குனர்?

‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படம் ‘சீன்’. மலையாளத்தில் ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களைக் கொடுத்த ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்த்ராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர் இன்பராஜ் பாண்டியன் ஐ.பி.எஸ். என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். குற்றவாளிகளைக் கையாள்வதில் அதிரடியான அணுகுமுறையைக் கொண்ட காவல் அதிகாரியாக அவர் தோன்றுவது படத்தின் முன்னோட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையே, சூர்யாவின் 49-வது படத்தை ‘மண்டாடி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த படத்திற்கு முன்பாக வேறொரு திரைப்படத்தில் நடித்து முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணிகளை நிறைவு செய்த பிறகே மதிமாறன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Add a Comment

Leave a Reply