‘சிங்காரம்’ திரைப்படம் எப்படி இருக்கு? -திரைவிமர்சனம்!

குறவர் சமூகத்தைச் சேர்ந்தவராக யோகிபாபு நடித்துள்ள இப்படம், நாடோடிகளாக வாழும் அந்த மக்களின் அன்றாடப் போராட்டங்களையும் அடிப்படை உரிமைகளுக்காக அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் பேசுகிறது. தாங்கள் தயாரிக்கும் பொருட்களை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தும் இவர்களுக்கு, ஒரே இடத்தில் நிலையாக வசிக்கவில்லை என்ற காரணத்தால் அரசின் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுகின்றன. இந்தச் சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

யோகிபாபுவின் தந்தையாக நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவருக்கு லாட்டரியில் பரிசுத்தொகை கிடைக்கிறது. அதன்பிறகு குடும்பத்தின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், அவர்கள் மேற்கொள்ளும் பயணங்களும் மீதிக்கதையாக விரிகின்றன.

‘மண்டேலா’ படத்திற்குப் பிறகு யோகிபாபுவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக இது அமையும் எனக் கூறலாம். வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களைக் கடந்து, அழுத்தமான கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல், தந்தை கதாபாத்திரத்தில் வரும் எம்.எஸ். பாஸ்கரும் தனது அனுபவமிக்க நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது அவரது பலம் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார்.

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், அடிப்படை உரிமைகள்கூட கிடைக்காமல் ஒரு சமூகத்தினர் சந்திக்கும் பாதிப்புகளையும் திரையில் பதிவு செய்த விதம் படத்தின் முக்கியமான பலமாக உள்ளது. இத்தகைய கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த மக்களின் பிரச்சினைகளைப் பேசிய இயக்குநர் கதிர்வேலுக்குப் பாராட்டுகள். குறிப்பாக, இடைவேளைக் காட்சி கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளது.

இருப்பினும், ‘மண்டேலா’ படத்தில் இருந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் குறைவாகவே உள்ளன. நகைச்சுவைக் காட்சிகளும் வசனங்களும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அதேபோல், தொழில்நுட்ப அம்சங்களில் பட்ஜெட் கட்டுப்பாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. வலுவான சமூகக் கருத்தும் சிறப்பான நடிப்பும் படத்திற்குப் பலமாக இருந்தாலும், பொழுதுபோக்கு அம்சங்களின் குறைபாடு பலவீனமாக அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply