பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர். சுதர்சனத்தின் மகனும், இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய நண்பருமான கிட்டார் கலைஞர் சதானந்தம் (79), சென்னையில் இன்று (அக். 29) காலை காலமானார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏவிஎம் நிறுவனத்தின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். அவரது மகனான சதானந்தம், சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டு கிட்டார் வாசிப்பதில் சிறந்து விளங்கினார். இளையராஜாவுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்த அவர், ஒரே ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இருவரும் இசைக் கலைஞர்களாக இணைந்து பணியாற்றிய அனுபவத்தை இளையராஜா பல மேடைகளில் பகிர்ந்துள்ளார்.
பின்னர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் கலைஞராகத் தொடர்ந்து பணியாற்றிய சதானந்தம், உடல்நலக் குறைவு ஏற்படும் வரை அவருடன் இணைந்து இசைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சுமார் 5,000 பாடல்களுக்கு கிதார் வாசித்துள்ள அவர், கீபோர்டு இசைப்பதிலும், இசை நிரலாக்கத்திலும் திறமை பெற்றிருந்தார். தனியாகப் பக்தி இசை ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். இளையராஜாவின் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்த சதானந்தத்தை, அவர் அன்புடன் ‘சதா’ என்று அழைப்பார். நீண்டகால இசைப் பயணத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய முக்கியக் கலைஞரை இழந்தது இசைத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை மயிலாப்பூரில் நடைபெறுகிறது.
