கொலையின் பின்னணியில் என்ன மர்மம்? ‘இறுதிப்பக்கம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஒரு கொலையைச் சுற்றிய மர்மத்தையும் விசாரணையையும் மையமாகக் கொண்ட விறுவிறுப்பான திரில்லர் படமாக ‘இறுதிப்பக்கம் 2 – Fresh Blood’ உருவாகி வருகிறது. ‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக மனோ வெ கண்ணதாசன் இயக்கும் இப்படத்தை Insomniac’s Dream Creations நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளம் நடிகர் மணிகண்டன் இந்தப் போஸ்டரைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததுடன், படக்குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வழக்கமான திரைப்படப் போஸ்டர்களிலிருந்து மாறுபட்டு, கொடூரமான சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையாளர்களுக்கு நேரடியாகக் காட்டும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், ரத்த வெள்ளத்தில் தலைகீழாகக் கிடக்கும் பெண்ணைச் சுற்றி தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. இந்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிறக் காரும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு அம்சமும் படத்தின் கதையில் ஏதோ ஒரு மர்மம் மறைந்திருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, பெண்ணைச் சுற்றியுள்ள ரத்தம் காரின் பாதை போல நீண்டு செல்வது போஸ்டரில் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான காட்சி, நடந்த கொலைக்கும் காருக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் என்ற கேள்வியை எழுப்புகிறது. ‘இறுதிப்பக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள போஸ்டர், கதையின் முடிச்சுகளை அவிழ்க்கும் விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் பதற்றம் நிறைந்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading