தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் மமிதா பைஜுவின் அடுத்த படமாக ‘ஹலோ டியர்’ உருவாகியுள்ளது. ‘பிரேமலு’ படத்தில் மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் ஜோடிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் ஒன்றாக நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. தென்னிந்திய அளவில் கவனம் பெற்ற ‘பிரேமலு’ படத்தைத் தொடர்ந்து, தமிழில் மமிதா நடித்த ‘டியூட்’ திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து பல்வேறு பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. மேலும், அவர் நடித்த ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ ஆகிய மூன்று படங்களும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுவது அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
காதலும் நகைச்சுவையும் கலந்த கதைக்களத்தில் உருவாகும் ‘ஹலோ டியர்’, இன்றைய நகர வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள டினாய் பாலோஸ், இதற்கு முன்பு ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்தின் இணை எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 20-வது படைப்பாக உருவாகும் இந்தப் படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் கூட்டணி மீண்டும் திரையில் இணையும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஹலோ டியர்’ திரைப்படம் 2027 ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
