நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள புதிய தமிழ் புலனாய்வுத் திரைப்படமான ‘BURIED’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போலீஸ் விசாரணை தொடர்பான செய்தித்தாள் துணுக்குகள் மற்றும் முகமூடி அணிந்த நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் இருப்பது போன்ற காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘வெப்படம்’ படத்தை இயக்கிய ஹாரூன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக வெற்றி நடித்துள்ளார். காவல் துறையில் பணியாற்றும்போது ஒரு அதிகாரி எதிர்கொள்ளும் சவால்கள், அவரது தொழில் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விசாரணை த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமூக வலைதளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அக்ஷதா ஸ்ரீனிவாஸ், சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், கோடங்கி வடிவேல், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
