மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இருவரும் முதன்முறையாக இணையும் இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
‘இஞ்சி வெல்லம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் மீண்டும் காதல் கதையை இயக்குவதுடன், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மணிரத்னத்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, அவரது இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று தெரிவித்துள்ளார். காதலை மணிரத்னம் திரையில் காட்சிப்படுத்தும் விதம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதை அழகாகவும் ரசிக்கும்படியும் வெளிப்படுத்துவதில் அவர் தனித்துவமான ஆர்வம் கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனது திரைப்பயணத்தில் பல எதிர்பாராத விஷயங்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்ட விஜய் சேதுபதி, ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் விற்பனையானது, இந்தி படத்தில் நடித்தது, தற்போது மணிரத்னம் படத்தில் நடிப்பது என பல அனுபவங்கள் கிடைத்திருப்பதாகவும், “குமுதா ஹேப்பி அண்ணாச்சி!” என தனது பாணியில் தெரிவித்துள்ளார்.
—
