விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சூதாட்டத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஏற்கனவே சில முறை வெளியீடு தள்ளிப்போன நிலையில், தற்போது அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அவரிடம், எதிர்காலத்தில் தனது தந்தை விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படிப்பட்ட கதையை தேர்வு செய்வார் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், தனது தந்தைக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருப்பதாகவும், அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு தங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றும் கூறினார். விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவரது நகைச்சுவை உணர்வை மையமாக வைத்து ஜாலியான காமெடி படத்தை உருவாக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
—
