மகாபாரதத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவரான கர்ணனாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், லாரன்ஸின் புதிய கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தற்போது லாரன்ஸ் ‘காஞ்சனா 4’ மற்றும் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பணிகளும் நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாக வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் அவர் கவனம் செலுத்துகிறார்.
கர்ணன் வேடம் கிடைத்திருப்பது குறித்து ராகவா லாரன்ஸ் தனது பதிவில், புராணங்களில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடிப்பதில் மகிழ்ச்சியும் பாக்கியமும் அடைவதாக தெரிவித்துள்ளார். இந்த திரைக்கதை தன்னிடம் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றும், இப்படத்தை தன்னிடம் கொண்டு வந்து சாத்தியமாக்கிய இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும், ரசிகர்களின் ஆசீர்வாதமும் ஆதரவும் தனக்கு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
