தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்து நடிகை ரோஜா சமீபத்திய நேர்காணலில் கருத்து தெரிவித்துள்ளார். விஜய்யின் வெற்றியை குறிப்பிட்ட அவர், அதிர்ஷ்டத்தால் நடிகர் விஜய் முதல்முறையே முதலமைச்சர் ஆகிவிட்டார். மக்கள் சினிமாவில் பார்த்த அவரது கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனையில் வாக்களித்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
விஜய் கட்சி தொடங்கியபோது, அரசியலுக்குத் தேவையான அளவு மக்களை நேரில் சந்தித்து பேசுவது மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வது அவருக்கு சவாலாக இருக்கும் என தான் நினைத்ததாக ரோஜா தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் களப்பணி மேற்கொண்டு மக்களின் பிரச்னைகளை நேரடியாக அறிந்துகொள்ள அவருக்கு போதிய கால அவகாசம் இருந்ததா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
சினிமாவில் ஒரு நடிகருக்கு கிடைக்கும் வரவேற்புக்கும் அரசியலில் மக்களின் எதிர்பார்ப்புக்கும் வித்தியாசம் இருப்பதாக கூறிய ரோஜா, ஆட்சியின் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் விஜய்யை மக்கள் எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பது தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார். அரசியலில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது முக்கியம்; எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்றால் மக்கள் தங்களது கருத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
