தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு துறைகளில் பயணித்து வரும் அவர், தற்போது எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இணைந்திருப்பது குறித்த தகவலை சங்கத் தலைவர் சேரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் தலைமையிலான அணி பெரும்பான்மை வெற்றி பெற்றது. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பிறகு கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், இதுவரை சங்கத்தில் இணையாத திரையுலகைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் உறுப்பினர்களாக இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயனை சேரன் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து சேரன் வெளியிட்டுள்ள பதிவில், சிவகார்த்திகேயன் தங்களது வேண்டுகோளை ஏற்று பாடலாசிரியராக சங்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சில ஆலோசனைகளையும் அவர் வழங்கியதாகவும், சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் சேரன் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த இணைவு மகிழ்ச்சியளிப்பதாகவும், அவருடைய முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்றும் தனது பதிவில் சேரன் தெரிவித்துள்ளார்.
