விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்துள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அட்லீ, தனது திரைப்பயணத்தில் விஜய்யின் பங்களிப்பு குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.
தனது வளர்ச்சிக்கு உழைப்பு முக்கிய காரணமாக இருந்தாலும், விஜய் வழங்கிய வாய்ப்புகளும் முக்கியமானவை என்று அட்லீ குறிப்பிட்டார். ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தனக்கு அடையாளம் கிடைத்த பிறகு, விஜய் தொடர்ந்து ஊக்கமளித்து வாய்ப்புகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக ஷாருக்கானை வைத்து படம் இயக்குமாறு விஜய் கூறியதாகவும், அந்த ஆலோசனையை ஏற்று உருவான திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அட்லீ கூறினார்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகளை அடிப்படையாக வைத்து வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்தால் தங்களது இலக்கில் இருந்து விலகிவிட நேரிடும் என்றும், “ஊர் வாயை அடக்க முடியாது” என்ற பழமொழியை குறிப்பிட்டு அட்லீ பேசினார். விமர்சனங்களை கடந்து இலக்கை நோக்கி பயணிப்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அரசியல் குறித்து பேசிய அட்லீ, அடுத்த தலைமுறை அரசியலில் விஜய்க்கு முக்கிய பங்கு இருப்பதாக தனது கருத்தை தெரிவித்தார். அதே நேரத்தில் தான் அரசியல்வாதி இல்லை என்றும், தனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டார். சட்டசபையில் நடைபெறும் விஷயங்கள் குறித்த தகவல்கள்கூட சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் குழந்தைகளையும் சென்றடையும் சூழல் இருப்பதால், அரசியல் நம்முடன் தொடர்பில்லாதது என்று ஒதுங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் விஜய் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை பேசுபொருளாகியுள்ள நிலையில், அந்த விவகாரத்திற்கு அட்லீ தனது பேச்சின் மூலம் மறைமுகமாக பதிலளித்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது அவர்களது கருத்தாகவே பார்க்கப்படுகிறது.
