தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பயணித்து வரும் சந்தீப் கிஷனிடம், இரு திரையுலகங்களிலும் தனது படத் தேர்வு எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், தனது சினிமா பயணத்தில் இருக்கும் வித்தியாசத்தை சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ளது.
தெலுங்கில் ஒரு படத்தை உருவாக்குவது குறித்து சந்தீப் கிஷன் கூறும்போது, முதலில் தனக்கு பிடித்த இயக்குநரை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து பல மாதங்கள் கதையை விவாதித்து மெருகேற்றிய பிறகு, அந்தக் கதையை நம்பும் தயாரிப்பாளர்களைத் தேடி கண்டுபிடித்து படத்தை உருவாக்குவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், தமிழில் தனது நிலைமை முற்றிலும் வேறு என சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். ‘மாநகரம்’ படத்திற்குப் பிறகு தான் நடித்த அனைத்து தமிழ் படங்களுக்கான வாய்ப்புகளும் தன்னைத் தேடி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் படங்களைத் தேர்வு செய்வதற்காக எந்தவிதமான திட்டத்தையும் வைத்துக்கொண்டு செயல்படவில்லை என்றும், வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக நடித்து வருவதாகவும் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.தற்போது முதலமைச்சரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
