மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு ‘ஆப்ரேஷன் கங்கா’ என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் இணைந்துள்ளார். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பார்த்திபன், ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தில் இடம்பெறும் ஐந்து முக்கிய நடிகர்களில் தனது பெயரும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் போர்ச்சூழலில் சிக்கியபோது அவர்களை ஆபத்திலிருந்து மீட்ட சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாவதாகவும், அதில் தானும் ஒரு பகுதியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படம் ஆரம்பத்தில் ‘L367’ என்ற தற்காலிக தலைப்பில் உருவானது. ‘மேப்பாடியான்’ மூலம் இயக்குநராக அறிமுகமான விஷ்ணு மோகன், அந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றவர். பின்னர் ‘கத இன்னுவரே’ படத்தை இயக்கிய அவர், தற்போது மோகன்லாலை வைத்து இந்த புதிய படத்தை இயக்குகிறார்.
படத்தின் முழுமையான கதைக்களம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதையும், வழக்கமான ராணுவ திரைப்படமாக இது இருக்காது என்பதையும் இயக்குநர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
